சென்னை: உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் கல்லூரிகளில் நிரந்தர உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் போட்டித்தேர்வு மூலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கூறியுள்ளதாவது, "அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ல் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்வுப் பணியை முடிக்க இயலவில்லை. இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டு முதலமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டப்பட்டு, தகுதி, கற்பித்தல் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வுக்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையைக் கைவிட்டு, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரியப் போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறையினால் சுதந்திரமான நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்வு உறுதி செய்யும். ஆனால் 2019 ஆண்டு முதல் உதவி பேராசிரியர் பணியிடங்கள் தேர்வுச் செய்யப்படவில்லை. அதன் பிறகு அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019 ம் ஆண்டு உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் இந்த தேர்வுக்கும் பரிசீலிக்கப்படும். புதியதாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, எழுத்துத் தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தீண்டாமை ஒழிப்பிற்கான முதல் கணை.. வைக்கம் போராட்டமும், பெரியாரின் பங்களிப்பும்!