கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த ஏழு மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்தநிலையில் சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை நேரடியாக கல்லூரிகளுக்கு வரவேண்டுமென அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உயர் கல்வித் துறை அதிகாரியிடம் கேட்டப்போது, "அரசு முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளை திறக்க அனுமதித்து உள்ளது. எனவே பிற ஆண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டுமென நிர்பந்திக்கக்கூடாது என, உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களை கல்லூரிக்கு வரவழைப்பது உறுதி செய்யப்பட்டால் அக்கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.