சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்நோக்கு மருத்துவமனையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியம், “கடந்த மார்ச் 21ஆம் தேதி கிண்டி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அடிக்கல் நாடப்பட்டது. ஏற்கனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்நாேக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தென் சென்னை பகுதி மக்களுக்கு பன்நோக்கு மருத்துவமனையாக கிண்டியில் கட்டப்பட்டு வருகிறது.
வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த மருத்துவமனை தயார் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு பொதுமக்கள் உள்ளே வரும் வகையில் 3 வழிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதேபோல் இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அழைக்கவுள்ளோம். இந்தியாவிலேயே முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறந்து வைக்கப்படவுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் புதிய கட்டமைப்பை 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். மேலும், இடைநிலை பராமரிப்பு மையம், 75 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடங்கி வைக்கவுள்ளார். டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் மனம் என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் மனநல ஆலோசனைகள் பெற இந்த அமைப்பு செயல்படவுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன குழப்பம், ஆலோசனைகளை வழங்க நட்புடன் உங்களோடு என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுவான தொலைபேசி எண் மற்றும் விளக்க புத்தகத்தையும் 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.
தமிழகத்தில் காப்பீட்டு திட்டம் சிறப்பாகவே செய்யப்படுகிறது. மருத்துவமனை கட்டமைப்புகளை காப்பீட்டு தொகை மூலமாகவும் பூர்த்தி செய்து கொள்ள மருத்துமனைகளுக்கு அறிவுரை வழங்கபட்டுள்ளதே தவிர அதனையே பிரதான நிதியாக மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை” என்றார்.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தொழில்நுட்ப பிரச்னைதான் காரணம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்படி தொழில்நுட்ப பிரசனை வரும். மேலும் விரைவில் ஒன்றிய அமைச்சரை டெல்லியில் சந்திக்கும் போது இதுகுறித்த விளக்கத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை தெரிவிப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நீட் விலக்கு குறித்து மத்திய சுகாதாரத்துறை கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதபடுத்தினாலும் தற்போது வரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. நம்பிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. நீட் விலக்கு பெறத் தொடர்ந்து பரிசீலனை செய்யபடுகிறது” என தெரிவித்தார்.