தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு விரும்பும் தன்னார்வலர்களுக்குப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது;
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 200 டோஸ் தமிழ்நாடு வந்துள்ளது.
கரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளின்படி, பரிசோதனை மேற்கொள்ளப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட, கரோனா நோய் தாக்காத, எதிர்ப்பு சக்தி ஏற்கெனவே உருவாகாத நபர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதற்கட்டமாக தலா 150 பேருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படவிருக்கிறது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முதல் டோஸ் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலேயே வைத்து வழங்கப்படும்.
கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு விரும்பும் தன்னார்வலர்கள் பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறையின் இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான விபரங்களை அறிய 044 29510500 என்ற தொலைபேசி எண்ணிலும், covidvaccinetrialdph@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புக் கொண்டு கேட்டு அறியலாம்.
ஒரு மாதத்துக்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பு மருந்து போட்டுக்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். தடுப்பு மருந்தினால் பாதிப்பு ஏற்படுகிறதா என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், தடுப்பு மருந்தினால் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து ஆய்வு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: உலக அளவில் 9 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!