கரோனா வைரஸ் பரிசோதனைக்கு கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர் ஆய்வகங்களை பயன்படுத்த உத்தரவிடக் கோரி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள ஆய்வகங்கள் தவிர்த்து, தமிழகத்தில் அறிவியல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர் ஆய்வகங்களை கரோனா தொற்று பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கரோனா தொற்றுக்கு முழுமையான அளவில் தமிழக அரசு சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போதைய நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்றை கண்டறியும் 53 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை வசமிருந்த 25 பி.சி.ஆர் கருவிகள் கரோனா பரிசோதனைக்கு ஏதுவாக தற்போது சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அதிக அளவிலான பி.சி.ஆர் ஆய்வக வசதி உள்ள மாநிலமாகவும், அதிகப்படியான நபர்களுக்கு பரிசோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.