சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் (Centre of Excellence for Road Safety CoERS) சாலை பாதுகாப்பு தொடர்பான சிந்தனை களமாக செயல்பட்டு வருகிறது. தரவுகளின் அடிப்படையில் சாலை பாதுகாப்பில் மத்திய/ மாநில அரசுகளுக்கு அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழுவும் (Special Task Force- Road Safety), சென்னை ஐஐடி-ம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது.
அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத்தணிக்கைகளை நடத்துதல், மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலைக்கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குதல், பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விபத்து விசாரணை அறிக்கை மற்றும் ஆபத்தான இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல் போன்ற பல இலக்குகளை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.
மேலும், அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்துவதற்கான வடிவமைப்பு, தரவு சேகரிப்பில் இடைவெளியைக் கண்டறிதல், தரவுச்சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் தெளிவான நெறிமுறைகளை வகுத்தல், அமலாக்கத்திற்கான வியூகங்களை வகுக்க ஏதுவாக தரவு சார்ந்த மேம்பாட்டு முறைகளைப் பரிந்துரைத்தல், செயலாக்க நடைமுறைகளில் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்ரீதியாக மதிப்பிடுதல், போக்குவரத்தை திறம்பட அமல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை முழுமையாக உருவாக்குதல் போன்ற எட்டக்கூட இலக்குகளை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.
இந்தக்கூட்டு முயற்சி பற்றிப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது , “ சாலைப் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியப்பணியில் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதில் ஐஐடி மெட்ராஸ்-க்கு மிக்க மகிழ்ச்சி.
தமிழ்நாடு காவல்துறையின் வலுவான தொழில்நுட்ப மற்றும் கள அனுபவங்களையும், அவர்களிடம் உள்ள பெருமளவிலான தரவுகளையும் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புக்கான செயல்திட்டத்தை மிகக் குறுகிய காலத்திலேயே வடிவமைக்க முடியும் என்பதில் ஐயமில்லை " எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் ஆக்கப்பூர்வத் திட்டத்தைப் பாராட்டிப் பேசிய தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குநரும் , சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழுவின் ( STF - RS ) தலைவருமான திரு . வினித் வாங்கடே கூறும்போது " பாதுகாப்பான சாலைகளும் பாதுகாப்பான பயனர்களும் ஒன்றுக்கொன்று சீராக இருக்கும்போதுதான் சாலைப் பாதுகாப்பும் வலுவாக இருக்கும் . ( சாலைப் பாதுகாப்பு = பாதுகாப்பான சாலைகள் பாதுகாப்பான பயனர்கள் ) சாலைப் பயனரின் கல்வியுடன் அறிவியல் ரீதியான அமலாக்கம் இணைந்து பாதுகாப்பான பயனருக்கு உதவுகிறது.
அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்ட பல்வேறு செயல்திட்டங்களைக் கண்டறிந்து , அவற்றில் எவற்றைப் பயன்படுத்தலாம்; எவை வேண்டாம் என சரியான தொழில்நுட்பத்தின் அடிப்படையில், சரியான முறையில் செயல்படுத்த உள்ளோம் " என்றார்.
வினித் வாங்கடே மேலும் பேசும்போது, "காவல் துறையினர் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட வேண்டும். நகரங்களில் போக்குவரத்துக்கு என தனிப்பிரிவுகள் இருந்தாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெரும்பாலான நேரத்தைச்செலவிட வேண்டியுள்ளது.
மாவட்டங்களைப் பொறுத்தவரை , குறைவான எண்ணிக்கையிலேயே காவலர்கள் உள்ளனர். எனவே, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களே போக்குவரத்து செயல்பாட்டையும் கூடுதலாகக் கவனிக்க வேண்டும். காவலர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் , ஒரு நாளிலோ அல்லது மாதத்திலோ போலீசார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடிகிறது.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர சாலைப் பணிகளை கவனிக்கும் அமைப்புகளோடு இணைந்து குறுகிய, நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிவதும் தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை ( TNRSA ) உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதுதான் இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்” எனத் தெரிவித்தார் .
இந்த முன்முயற்சியை ஒருங்கிணைத்துவரும் ஐஐடி மெட்ராஸ் பொறியியல் வடிவமைப்புப் பிரிவின் ஆர்பிஜி ஆய்வகப் பேராசிரியரும், சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையத்தின் தலைவருமான பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து பணியாற்ற ஐஐடி மெட்ராஸ் -ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆர்வமாக உள்ளது.
விபத்துக்கு முந்தையநேர இடைவெளியில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, சாலைப்பாதுகாப்பை அமல்படுத்துவதில் அறிவியல் ரீதியான அணுகுமுறை அவசியத் தேவையாகும். விபத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட துறையினர் திட்டமிடல் மற்றும் அமலாக்கத்தை மேற்கொள்ளும் வகையில், 3M & E மாதிரியைப் பயன்படுத்தி விபத்து குறித்து விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் மதிப்பிடுவது பயனுள்ளதாக அமையும்.
தமிழ்நாட்டில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு , இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் ( MORTH ) இணைந்து நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆர்வமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் - இந்திய மகளிர் அணிகள் அபாரம்