சென்னையில், நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று (மே.15) தொடங்கியது. ஆனால், தினசரி 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தகுந்த இடைவெளி இல்லாமல், மக்கள் அரங்கத்தின் வாசலில் கூடியுள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள டிடிவி தினகரன், ”ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து விற்பனை செய்யும் மையங்களில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்க்க அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மருந்தினை விற்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்து வாங்க வருபவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அளவுக்கு இந்த மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.
இதனை உடனடியாக முறைப்படுத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவைப்படுவோர் அனைவருக்கும் எந்தவித சிரமமும் இன்றி ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும் இம்மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.