இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை செயல்படக் கூடாது என ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா பரவல் காரணமாக, தற்போது பள்ளிகள் செயல்படாத நிலை உள்ளது.
இந்தக் கல்வியாண்டிற்கு தேவையான அனைத்துப் பாடநூல்களும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில், பொதுத் தேர்வை எதிர் கொள்ளவிருக்கும் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுவிட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது 2,3,4,5,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு காலதாமதமாகியுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கும் பள்ளி மாறுதலில் வரும் சில மாணவர்களுக்கு பிற வகுப்புகளுக்கும் (2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு) ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் புதிதாக மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
பதினொன்றாம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டு, அதே நாளில் மாணவர்களுக்குப் பாடப்புத்தகம், புத்தகப் பை, சீருடை மற்றும் கல்வி சார்ந்த பொருள்களும் வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.
அதேபோன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு, 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சேர்க்கையை இணையதளம் மூலம் தொடங்கிட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இதுவரை எங்களால் மீளமுடியவில்லை' - ஆற்றாமையில் கண்ணீர் சிந்தும் வீரமங்கைகள்!