சென்னை: நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார் செண்பகராமன் ஆகியோரின் தொண்டை போற்றிடும் வகையில், அரசின் சார்பில் ஜூலை 17ஆம் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தியாகிகள் மணிமண்டபம் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டது. இங்குள்ள தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவர்களின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக காத்த போரூர் ஏரி
போரூரில் ஏரி இருப்பதே அதிமுகவினருக்கு தற்பொழுது தான் தெரிய வருகிறது. அதிமுக ஆட்சியில் இந்த ஏரியை மணல் கொட்டி மூடும் முயற்சியில் ஈடுபட்டனர். திமுக மற்றும் வேறு சில தன்னார்வ இயக்கங்கள் தான் இந்த ஏரி சென்னைக்கு முக்கியமான நீர் ஆதாரம் என்று காத்து வந்தனர். இந்த ஏரியில் கழிவுகள் கொட்டுவது தடுத்து நிறுத்தப்படும். மீறி கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூலை மாதத்தில் 71 லட்சம் தடுப்பூசி செலுத்த இலங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 4,15,570 தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. டெல்லி சென்ற போது பிரதமரிடம் மேலும் ஒரு கோடி தடுப்பூசி சிறப்பு தொகுப்பாக வழங்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ஜனவரி மாதம் முதல் டெங்கு நோயால் 2 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக ட்ரோன் மூலம் கொசு மருந்து அடித்து வருகிறோம். அமைச்சர் கே.என். நேருவும், அலுலலர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கை
புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் அளித்துள்ளோம். இந்த வாரத்தில் ஒன்றிய அரசின் குழு தமிழ்நாடு வந்து, கல்லூரிகளை ஆய்வு செய்த பின்னர் தான் மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரிய வரும்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று அந்த மாணவர்களைக் கல்லூரி வளாகம் கட்டி முடிக்கும் வரை தனியார் மருத்துவக் கல்லூரி அல்லது கலைக்கல்லூரியில் படிக்க வையுங்கள் என்று ஒன்றிய அரசு கூறியது நடைமுறை சாத்தியமற்றது. வேறு மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க வைக்கலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதுகுறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்" என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு