சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், திரையரங்கப் பணியாளர்கள், அனைவரும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடையும் நிலையில், இன்று காலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை
முன்னதாக, திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா துறை சார்ந்தவர்கள் திரையரங்குகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று திரையரங்குகள் திறப்பது குறித்து இன்று காலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா முதல் அலையின் காரணமாக வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. முதல் அலையின் தீவிரம் குறைய தொடங்கியபோது, 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அப்போது, மாஸ்டர், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக சிறப்பாக ஓடின.
சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி
இதனிடையே, கரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், திரையரங்குகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால், பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியை உண்டாக்கியது.
தற்போது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பால், சினிமா ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட சினிமா துறை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!