சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், தங்களது குடும்பத்தினர்களுடன் பேசுவதற்கு அந்தந்த சிறைகளிலேயே தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான கால அளவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய வசதியாக வீடியோ கால் அழைப்பை மேற்கொள்ளளும் வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது. சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுத்திடும் பொருட்டு, சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தொலைபேசி வசதிக்கான கால அளவை 3 நாள்களுக்கு ஒரு முறை என ஒரு மாதத்திற்கு 10 முறை அதிகரிக்கப்படுகிறது. இதேபோல், ஒரு நபர் ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, சிறைச்சாலையில் காணொளி மூலம் பேசும் வசதியும், (வீடியோ கால்) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தொலைபேசியில் பேசும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதனை ஏற்று தமிழக அரசு தற்போது தொலைபேசியில் பேசும் நேரம் மற்றும் எண்ணிக்கையினை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், 2023-24 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைச்சாலையில் உள்ள, சிறைவாசிகளுக்கு தங்கள் குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேசும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதிக்காக பொது நிறுவனமான பி.எஸ்.என்.எல், ரெயில்டெல், கெல்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்தும், அவர்களின் தயாரிப்புகள் குறித்தும் அரசிடம் விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதி மத்திய சிறைச்சாலைகளிலும், சிறப்பு சிறைச்சாலைகள், பெண்கள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பள்ளிகளிலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலி: இரவில் உலா வரும் கரடிகளால் பரபரப்பு.. வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் பீதி!