சென்னை: மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசுத் துறைகளில் ஊழலைத் தடுக்கும் விதமாக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த பொது நல வழக்கில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வருமான வரித்துறையில் உள்ள ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்கள் ஆன்லைன் வாயிலாக தங்களது அசையா சொத்துக்களின் விவரங்களை வெளியிடுகின்றனர் என்றும், மத்திய அரசின் ஒட்டுமொத்த ஊழியர்களின் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று தங்களால் உத்தரவிட முடியாது என்றும், அதனை அந்தந்த துறைகளின் தலைமைதான் முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக அரசு ஊழியர்கள் பணி ஒழுக்க விதிகளின்படி, தங்கள் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களிலும் சொத்துகளை வாங்கினாலும், விற்பனை செய்தாலும், அதன் விவரங்களை தலைமை அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என விதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஒவ்வொரு ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தங்களது அசையா சொத்துகளை ‘ஸ்பேரோ’ என்ற ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும் நடைமுறை உள்ளதாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை முதன்மை தலைமை வன பாதுகாவலரிடம் சமர்பிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 3) சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆண்டுதோறும் அரசு ஊழியர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட முடியுமா? என்று அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார், அரசு ஊழியர்கள் பணி ஒழுக்க விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்கின்றனர் என்றும், அவற்றை இணையதளங்களில் வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.