சென்னை: விண்வெளித் துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளின் சாதனைகளை போற்றும் விதமாக, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்' நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில், பரிசுத்தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் சிவன், சந்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விஞ்ஞானிகள் நாராயணன், இராஜராஜன், சங்கரன், வனிதா, ஆசிர் பாக்கியராஜ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, "ஆதித்யா எல்-1 திட்டமிட்டப்படி செயல்பட்டு வருகிறது. அதன் சோதனைகளை ஜனவரி மாதம் துவக்க உள்ளது. அதன் மூலம் சூரியன் குறித்து ஆராய்ச்சியை மேற்காெள்ள முடியும்" என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் சிவன் கூறியதாவது, "அரசு பள்ளியில் படித்தால், உயர் பொறுப்புகளுக்கு வர முடியாது என்ற அவநம்பிக்கையில் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போது பாராட்டப்பட்ட விஞ்ஞானிகள் அனைவருமே அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அரசு மேற்கொண்டு இருக்க கூடிய இந்த முயற்சியானது மாணவர்களிடையே, இளைஞர்களிடையே நாமும் உயர் பொறுப்புகளுக்கு செல்ல முடியும் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
சன்மானம் வழங்கப்பட்டது என்பதை விட, விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை என்பது மிகப்பெரிய ஒரு அங்கீகாரமாக இருக்கும். எந்த அளவிற்கு அவர்களிம் திட்டம் வெற்றி அடைந்தபோது இருக்குமோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவார்கள்" என தெரிவித்தார்.
பின்னர் பேசிய சந்திரயான் 3-யின் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், "தமிழ்நாட்டு அரசால் இத்தகையான பாராட்டுக்களைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை. எங்களின் தனிப்பட்ட உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கவில்லை. ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றியாக பார்க்கிறேன். எங்களைப்போலவே இன்னும் பல இளம் விஞ்ஞானிகள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை என்பது பெருமையாக உள்ளது" என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1-னின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி கூறும்போது, "ஆதித்யா எல் 1 திட்டமிட்டப்படி, புவி ஈர்ப்பு விசையில் இருந்து சுற்றுப்பாதையில், எல் 1 பாயிண்டை நோக்கி பயணத்தில் இருக்கிறது. வரும் ஜனவரி முதல் வாரத்தில் எல் 1 நிலை நிறுத்தப்பட்டு, அதன் பேலாய்டு கருவிகள் துணையுடன் சூரியன் மற்றும் அதனை சுற்றி உள்ள கதிர்கள், கர்ணல் ஆகியவற்றை ஆய்வு செய்ய துவங்கும். இதன் மூலம் சூரியன் குறித்து பல்வேறு தகவல்களை பெற முடியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இஸ்ரோ தமிழக விஞ்ஞானிகள் பெயரில் உதவித் தொகை" முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!