சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து மூன்று நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அவரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி உள்பட மனைவி, மகள் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து இடுவது அறிவு சார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளியாக மாற்றுவதற்கு சமம். எனவே நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கூறியிருந்தார். இதனைக் கண்டித்து திமுகவினர் வருகிற 20ஆம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: "எனது முதல் படமும் கடைசி படமும் மிகப்பெரிய வெற்றி" - உதயநிதி ஸ்டாலின்!
இந்த நிலையில், மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் நிலவும் நீட் பிரச்னை, அரசியல் பிரச்னைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட மேலும் சில அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான் அவசரமாக இன்று (ஆகஸ்ட் 18) டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்று உள்ள ஆளுநர் ஆர்.என்,ரவி, நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) இரவு மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இரண்டும் டுபாக்கூர் கட்சிகள்" - நாராயணசாமி கடும் குற்றாச்சாட்டு!