சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி இருந்த நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்தும் ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்பு, பண இழப்பு மற்றும் ஆன்லைன் சைபர் மோசடிகள் என தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (மார்ச். 23) கூடியது. சட்டப் பேரவையில் இரண்டாவது முறையக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் ஒப்புதலுடன் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த வேளையில் டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து இது குறித்த ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளன.
தற்போது இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ரவி, நாளை இரவு மீண்டும் சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று காலை 11 மணி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை கூறியதாக கருத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று திடீர் பயணமாக அவர் டெல்லி புறப்பட்டு சென்று உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்க உள்ளதாகவும் சில தகவல் வெளியாகி உள்ளன. மேலும் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என நிர்வாகிகள் கூட்டத்தின் போது அண்ணாமலை பேசியதாக தகவல் பரவியது. பின்னர் கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என விளக்கமும் அளித்திருந்த நிலையில், அண்ணாமலை இன்று திடீர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் அடுத்தடுத்து இன்று டெல்லி புறப்பட்டு சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், என்ன காரணம் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர்" - அவதூறு பேச்சுக்காக ராகுலுக்கு சிறை