சென்னை: சட்டப்பேரவை 2021-22 மானியக் கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்பில், சிறுபான்மையின மக்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய 1000 தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 16) நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
அதில், "பிற்படுத்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக ஏற்றமடைய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. அதேபோல சிறுபான்மையின மக்கள் பொருளாதார மற்றும் கல்வி நிலையங்களில் திட்டமிட்ட உறுதியான முன்னேற்றம் அடைய அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட இயந்திரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் சிறுபான்மையினர்களுக்கு கீழ்க்காணும் தகுதிகளுக்குள்பட்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
- தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் - தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆண்டு வருமான உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருத்தல் வேண்டும்.
- வயது வரம்பு - 20 முதல் 45 வரை.
- கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- ஒருமுறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராகக் கருதப்படுவர்.
- முன்னுரிமை அடிப்படையில் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனவரி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து