தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், நாளை (மே 6) முதல் அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு பேரை பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்ட புதிய சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, குரூப் ஏ பிரிவில் உள்ள அரசு அலுவலர்கள் அனைத்து நாட்களும் வரவேண்டும். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். மூன்று நாள்களுக்கு ஒரு முறை பணிக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட வேண்டும்.
அரசு அலுவலகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், துறைகளின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பணியாளர்களின் வருகையை மூன்று நாட்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப, பணிச்சுமை, பணியாளர்களைப் பொறுத்து வரவைக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மின்னணு ஊடகத்தின் மூலம் பணியாற்ற வேண்டும் அரசு அனுமதியின்றி வெளி மாவட்டத்திற்கு செல்லக் கூடாது. இந்த உத்தரவு 20.05.2021வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.