சென்னை: ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அதற்கு தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 13ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 19) இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், ''தமிழ்நாடு அரசு இயற்றி உள்ள இணைய வழி சூதாட்ட தடைச் சட்டம், இணைய வழி விளையாட்டு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 2022 குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றி உள்ளோட்டமாக கருத்துகளைக் கூற முடியாது. ஆன்லைன் தடைச்சட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேலோட்டமாக தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கிறோம்.
மத்திய அரசு ஆன்லைன் தடைச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு சட்டம் இயற்றவில்லை என நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. இது நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது எனக் கூறினாலும், ஏற்கனவே அதிமுக அரசு இந்த சட்டத்தை இயற்றியது. அவசர சட்டமாக இருப்பதால், அதனை ரத்துச் செய்வதாகவும், தமிழ்நாடு அரசு புதிய சட்டம் கொண்டு வருவதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை: சங்கரன்கோவிலில் 2ம் நாள் போராட்டம்!
ஆனால், ஒன்றிய அரசு அதன் மீது எந்த விதமான மனுவையும் தாக்கல் செய்யாமல், ஒன்றிய அரசு சட்டம் இயற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தனியாக எந்த சட்டமும் எனக்குத் தெரியவில்லை.
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களும் இணையவழி சூதாட்டங்களை நடத்துபவர்களை பாதுகாக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. அரசிற்கு வருவாய் வருவதை குறிக்கோளாக கொண்டதாகத் தான் இருக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு குறித்து ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருந்தாலும் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். மாநில அரசின் உரிமையில் தான் ஆன்லைன் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம்.
ஆன்லைன் விளையாட்டிற்கும், ஆப்லைன் விளையாட்டிற்கும் உள்ள வித்தியாசம் வேறு. ரம்மி என்பது நேரடியாக விளையாடும் போது 2 பேர் நேரடியாக விளையாடுகின்றனர். ஆனால் ஆன்லைன் மூலம் நடத்தும் போது 3வது புராேகிராமர் என்ற ஒருவர் இருக்கிறார். அவர் அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றக் கூடியவர். அவர் எப்படி மாற்றுகிறாரோ அதன் அடிப்படையில் தான் விளையாடுபவர் பணத்தை இழக்கிறார் என்ற கருத்தை நாங்கள் பலமுறை தெளிவாக கூறிக்கொண்டே இருக்கிறோம்.
அந்த வித்தியாசத்தை புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கின்றனர். அதனை புரிந்து கொண்டு ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும். ஆன்லைன் விளையாட்டின் ஜி.எஸ்.டி வரியால் அரசுக்கு வரும் பாவப்பட்ட வருமானம் எங்களுக்குத் தேவையில்லை.
மத்திய அரசு இந்த விளையாட்டு மூலம் வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கிறது. மக்களின் உயிரிழப்பு குறித்து கவலைப்படுவதில்லை. மேலும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது வலுவான வாதங்களை தமிழக அரசு முன் வைக்கும். ஒன்றிய அரசு என்பது மாறுபட்ட கருத்துகளின் ஒன்றுபட்ட வடிவமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சம வேலை சம ஊதியம் - மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் இடைநிலை ஆசிரியர்கள்