சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச்.28) 2022-2023ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவை முன் வைத்து உரையாற்றினார்.
அப்போது, "இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள துணை மதிப்பீடுகள் மொத்தம் 26,352.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு வகை செய்கின்றன. இதில் 19,776.50 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 3,642.26 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலும், 2,934.23 கோடி ரூபாய் கடன் கணக்கிலும் அடங்கும்.
2022ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாளன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.
துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் சில முக்கிய இனங்கள் பின்வருமாறு,
* கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, போக்குவரத்துச் செலவினங்களுக்காக உணவு மானியத்தில் 2,140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்துத் துறை - ஓய்வுபெற்ற மாநிலப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஓய்வுக்கால பலன்களுக்காக 1,032 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திற்கு வட்டியில்லாக் கடனாக 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் நிலுவைச் செலவினங்களுக்காக 1,393.38 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 21 நாட்களில் கடன் - உதயநிதி ஸ்டாலின் தகவல்