தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும், தேர்விற்கு 12 ஆயிரத்து 687 பள்ளிகளில் படித்த ஒன்பது லட்சத்து 45 ஆயிரத்து ஆறு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் எனவும் அரசுத் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் கரோனா தொற்றுப் பரவல் காரணமான தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 100 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், அரசு தேர்வுத்துறை இன்று வெளியிட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவித்துள்ளது. இதனால் மீதமுள்ள ஐந்தாயிரத்து 177 மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
100 விழுக்காடு தேர்ச்சி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபோது தேர்வுத் துறை இயக்குநராக பொறுப்பிலிருந்த பழனிச்சாமி, காலாண்டு, அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகள் எழுதிய மாணவர்கள் விவரம், பள்ளிக்கு வராத மாணவர்கள் விவரம் குறித்து உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் எனக்கோரி, மதிப்பெண்கள் வழங்குவதில் தவறு செய்யும் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனால் தலைமையாசிரியர்கள் காலாண்டு, அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களின் பெயர் பட்டியலை அனுப்பாமல் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ”காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கும் பள்ளிக்கு ஆண்டு தொடக்கத்தில் வந்திருந்த மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த, பள்ளியை விட்டு இடையில் சென்ற மாணவர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் நவம்பர் மாதமே பெறப்பட்டன. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்திருந்தால், அவர்களது பெயர்களும் விடுபட வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.