இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் நலன் சார்ந்து நீண்டகாலமாக ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களை பாதிக்கிற எந்த பிரச்னையாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளை அழைத்து பேசி கருத்துக்களை பகிர்ந்து, விவாதித்து, தீர்மானமாக வடித்து, கொள்கை திட்டங்கள் வெளியிடப்படுகின்றன. ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணி. அதிமுக, பாஜக கூட்டணியைப் போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல.
திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் அடிக்கடி கூடி விவாதித்து முடிவெடுப்பதைப்போல அதிமுக கூட்டணி கட்சிகள் என்றைக்காவது மக்கள் பிரச்னைகள் குறித்து கூடி பேசியிருக்கிறதா? விவாதித்திருக்கிறதா? முடிவெடுத்திருக்கிறதா?
கூட்டணி கட்சிகள் என்பது அடிக்கடி கூடிப் பேசவேண்டும். கருத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆனால் அதற்க்கு முற்றிலும் மாறாக, கூட்டணி கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட நடைமுறையில் கடுகளவும் கடைபிடிக்காத அதிமுக கூட்டணியை என்னவென்று அழைப்பது?
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு முன்பாக பாஜக தலைமையோடு அதிமுக தலைமை கலந்து பேசியிருக்கிறதா? அதிமுக கூட்டணியில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் இருப்பதை விட ஒரு அவமானம் பாஜகவுக்கு இருக்க முடியாது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது. இந்நிலையில் எஃகு கோட்டை போல உறுதியாக செயல்பட்டு வருகிற திமுக தலைமையிலான கூட்டணியை பற்றி பேச ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் எவருக்கும் எந்த தகுதியும் கிடையாது.
எனவே, அதிமுக கூட்டணியில் இவளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு எப்பொழுதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழ்நாடு அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.