தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மொத்தம் 19,372ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 106 நபர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெறவுள்ளது.
ஏற்கனவே சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மருத்துவ நிபுணர்கள் குழு சென்னையில் தற்போது கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் காரணத்தால் சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும் எனவும் அரசு ஊழியர்கள் 75% பணியாளர்களை கொண்டு இயங்க மருத்துவக் குழு பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா மற்றும் சென்னையில் மாநகரப் பேருந்து போக்குவரத்து, மாவட்ட பேருந்துகள் அனுமதி, சென்னையில் ஆட்டோக்கள் அனுமதி, பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்கம் அனுமதி குறித்து நாளை நடைபெறும் ஆலோசனை முடிவில் தெரியவரும்.