சென்னை: தென்மேற்கு பருவமலை தொடங்கியது முதலே இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இயல்புக்கு மாறாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக சீர்குலைந்து காணப்படுகிறது.
மேலும், நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்பால் மாநிலம் முழுவதும் பெரும் இக்கட்டான சூழலை சந்தித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கி, வீடுகள் மண்ணில் புதைந்து பெரும் உயிர் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தின. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்கி, அம்மாநில முதலமைசர் சுக்விந்தர் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 22) காலை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தொலைபேசி மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எழுதியுள்ள கடிதத்தில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரை பாராட்டி உள்ளார். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு 10 கோடி ரூபாய் வழங்குவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!