சென்னை புனித தோமையர் மலை, ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று காவல் துறையினருக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்தை தெரிவித்தார்.
பொங்கல் கொண்டாட்டம்
இந்த பொங்கல் விழாவிற்கு வருகைபுரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். தமிழ்நாடு டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றனர். அங்கிருந்த காவலர்களின் குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.
களைகட்டிய பொங்கல் விழா
பொங்கல் பானைகளை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, காவல் துறையினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்தோடு பொங்கலை முன்னிட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாதிரி கிராமத்தினைப் பார்வையிட்டார். கயிறு இழுக்கும் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர், அதன் பின்னர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
காவல் துறையினருக்கான திட்டங்கள்
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ’தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையினரின் பங்களிப்பு அளப்பரியது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், காவலருக்கு வீட்டுவசதி வாரியத்தை அமைத்து வீடு வழங்கினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் காவலருக்கு முழு உடல் பரிசோதனை திட்டம், தமிழ்நாடு காவலர் அங்காடி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். அவர்தான் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தை கொண்டு வந்தார்.
பெண் காவலர்களுக்கு பேறுகாலத்தில் விடுமுறை நாட்களை உயர்த்தி வழங்கினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சியில் காவலருக்கு மனநலம் காக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
தற்போதைய ஆட்சியில் காவல் துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை பல்வேறு சவால்களை சமாளிக்க காவல் துறையை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு மிகை நேர மதிப்பூதியம் 200 ரூபாயிலிருந்து 500 ஆக உயர்த்தி வழங்கியுள்ளேன்’ என்றார்.
இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - பார்வையாளராக ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்