சென்னை - கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்களின் வேண்டுகோளை ஏற்று மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவரது முழு உருவச் சிலை அமைத்திட பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் வருகின்ற திங்கள் (நவம்பர்.27) அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிலையினை திறந்து வைக்கிறார்.
அரசியல் நாள்காட்டியில் கடைசி நாள் என்பதே இல்லை. - வி.பி.சிங் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது கூறியது.
மாவீரர்கள் நாள்: தமிழீழத்தில் மக்களுக்காகப் போராடி இன்னுயிர் ஈத்த வீரர்களை நினைவு கூறும் தினமாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர்கள் தினமாக ஈழத்தில் பார்க்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய சமூக நீதி காவலராகப் பார்க்கப்படுகின்ற வி.பி.சிங்கிற்கு தமிழீழ மாவீரர்கள் தினத்தன்று சென்னையில் சிலை திறக்கப்படவுள்ளது. இதில், நவம்பர் 27ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாருக்கெல்லாம் அழைப்பு: வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் மேலும் வி.பி.சிங் மனைவி சீதா குமாரி, அவருடைய மகன்கள் அஜயா சிங், அபய் சிங் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் .இதற்கான அழைப்பு என்பது முறையாக அனைவரிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வி.பி.சிங்கும் தமிழகமும்: அரசியல் நாகரீகத்தின் சின்னம் வி.பி.சிங், என மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி குறிப்பிட்ட வார்த்தைகள் இது.1989 -ல் தேசிய முன்னணி தொடக்க விழா நிகழ்வை மிகப்பெரிய அளவில் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த மாநாட்டை இன்றளவும் திராவிட கழகங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
தந்தை பெரியாரைத் தனது தலைவராகவும், கருணாநிதியைத் தனது சகோதரனைப் போலவும் ஏற்றுக் கொண்டவர் வி.பி.சிங். குறிப்பாக தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்ற ஒற்றை நேர்கோட்டில் பொதுவான குறிக்கோளை இருவரும் கொண்டிருந்தனர்.
அரசில் வட்டாரம் கூறுவது: தி.மு.க மகளிர் அணி சார்பாக ஒத்த கருத்துடைய பெண் தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக மிகப்பெரிய அளவில் சென்னையில் மாநாடு நடைபெற்றது.இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்படப் பல பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர்.குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில் பெண் தலைவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு மாநாடாகவும் அரசியல் வட்டாரத்தில் அன்றைய மாநாடு பார்க்கப்பட்டது.
அதே போல ஒரு கண்ணோட்டத்தைத் தான் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறுகின்ற வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்வும் பார்க்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்தியா கூட்டணியில் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நிகழ்வுக்கு ஒரு ஒத்திகை நிகழ்வாகத் தான் அரசியல் வட்டாரத்தில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகமும் - வி.பி.சிங்கிற்குமான நட்பு குறித்து விவரிக்கிறார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
வி.பி.சிங் என்னும் ஒருவர் சமூக நீதியின் போர்வாள் குறிப்பாக சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணையத்தை மண்டல் கமிஷன் என்ற பெயரில் தொடங்கி மிகப்பெரிய புரட்சியை இங்கு ஏற்படுத்தியவர். மிகக் குறுகிய ஆட்சிக் காலத்திலிருந்த போதும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியவர். அதில், மண்டல் கமிஷன் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அந்த பரிந்துரையை நிறைவேற்றவில்லை.
குறிப்பாகத் தமிழக மக்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்த காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைத்தது மற்றும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் கூட முரசொலி மாறனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தி.மு.கவிற்கு அழகு சேர்த்தவர் வி.பி.சிங் என்றார்.
மேலும், அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் மண்டல் கமிஷனை எதிர்த்தாலும் கூட பிற்காலத்தில் அம்மையார் சோனியா காந்தியும் அதை உணர்ந்து தி.மு.கவுடன் கூட்டணியில் இணைந்தார்கள் நாளடைவில் மண்டல் கமிஷனை காங்கிரஸும் ஆதரித்தது. இது தான் வி.பி.சிங்கிற்கு வெற்றி என்றார். மேலும், இப்போது பரிணாம வளர்ச்சி ஏற்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சூழல் இருப்பதால் அனைவரும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் கூட்டணியிலும் எந்தவித குளறுபடிகளும் கிடையாது என்றார்.
வி.பி.சிங் பொருத்தவரை மிகவும் நேர்மையான ஒருவர் அதனாலேயே அவருடைய செயல்பாடுகள் பலருக்குப் பிடிக்காமலிருந்தது. அதனாலேயே பல கடினமான சூழலை அவர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொருத்தவரை வி.பி.சிங் எப்போதுமே இட ஒதுக்கீட்டின் நாயகன் என்றே பார்க்கப்பட்டார். பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய படிக்கட்டுகளில் வி.பி.சிங் என்ற பெயர் எப்போதுமே இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கும் ஸ்டாலின்... தேசிய அரசியலுக்கு அடித்தளமா?