சென்னை: கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, தூத்துகுடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஏப்.26) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மதிமுக, விசிக உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது பலரிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசிக எம்பி ரவிக்குமார் தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் அழைக்காததன் காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், " உச்ச நீதிமன்றத்தில் , தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துக்களை பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும். கரோனா தாக்கத்தினால், தேவைப்படும் ஆக்ஸிஜனை தங்களது இரண்டு உற்பத்தி கூடத்திலிருந்து ( Oxygen Plant ) நாளொன்றுக்கு 1050 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த இடைக்கால மனுவிற்கு தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று(ஏப்.26) அல்லது நாளை(ஏப்.27) மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கின்றது. எனவே, உடனடியாக தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும்.
மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை. அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடைய கருத்துகளையும் கேட்க அவர்களை அழைக்க வேண்டும் என்று அரசு எண்ணியது. ஆனால், இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற சூழ்நிலை உள்ள காரணத்தால், அனைத்து கட்சிகளையும் அழைக்க இயலவில்லை" என்றார்.