தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி மாவட்டவாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். திறந்த வேனில் சாலை மார்க்கமாக சென்றும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குகள் திரட்டி வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இன்று (ஜன.21) தேர்தல் பரப்புரைக்காக வருகை புரிந்தார். தாம்பரம் சண்முகம் சாலையில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,’தமிழ்நாட்டில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட மக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
திமுக நடத்தும் கிராம சபை கூட்டம் பொதுமக்களை ஏமாற்றும் வேலை. திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் தவறான பரப்புரை, பொய்யான அறிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற நினைக்கிறார். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கவில்லை என திமுக பொய் பரப்புரை செய்துவருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டது. இதனால் வைரஸை விரைவில் கண்டுப்பிடித்து கட்டுப்படுத்தினோம். இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கு காக்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளோம். தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசுதான்.
திமுகவினர் மக்கள் ஏமாந்தால் தமிழ்நாட்டை பட்டா போட்டு விற்று விடுவார்கள். 24 மணி நேரமும் முதலமைச்சர் நாற்காலியை பிடிப்பதற்கு ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். 234 தொகுதிகளில் திமுக கனவில் ஜெயிக்கும், நிஜத்தில் ஜெயிக்காது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான். திமுக முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் வழக்கு அதிமாக உள்ளது.
இதை மறைக்க அதிமுக அமைச்சர்கள் திமுகவினர் மீது புகாரளித்துள்ளனர். நாட்டியே உலுக்கிய 2ஜி உழலை செய்துவிட்டு இவர்கள் அதிமுக மீது ஊழல் புகார் கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுக ஒரு அராஜக கட்சி; பிரியாணி கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் அவர்களை போட்டு அடிப்பார்கள். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்.
உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்தி பேசுகிறார். தமிழ்நாட்டில் பெண்களை தெய்வமாக நினைக்கும் போது இவர்கள் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நடமாட முடியுமா?சுதந்திரமாக இருக்க முடியுமா?
உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கின்றேன். மீண்டும் எனக்கு வாய்ப்பை தாருங்கள். வருகிற 27 ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறக்கப்பட்டள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’ எனக் கூறி முதலமைச்சர் தனது பரப்புரையை முடித்து கொண்டார்.
இதையும் படிங்க:பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!