சென்னை : முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின், இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில், 'திருவீழிமிழலைச் சகோதரர்கள்' எனப் புகழ்பெற்ற குடும்பத்தில், திரு.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு 1948ஆம் ஆண்டு பிறந்தார்.
விஷ்ணுபுரம் ஜார்ஜ் பள்ளியிலும்- புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர், 1977ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வழக்கறிஞர்களான திரு.கே.பராசரன், திரு.எஸ்.ராஜாராம், திரு.எஸ்.ஜெகதீசன் ஆகியோரிடம் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்று, பின்னர் 1991ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 2000ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2000 முதல் 2010 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் எட்டு தலைமை நீதிபதிகளின் கீழ் பணியாற்றி- பல்வேறு அமர்வுகளில் 1,00,926 வழக்குகளை விசாரித்தார். அவற்றுள் பல முக்கிய தீர்ப்புகளையும் வழங்கி, சட்ட நிபுணர்களுக்கு மிக சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார்.
அவரது ஈடு செய்ய முடியாத இழப்பால் வாடும் நீதித் துறையை சேர்ந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் விநியோகம்