நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகவும், கனமழையினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வர அமைச்சர்கள் அலுவலர்கள், அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக பணியாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களையும் நியமனம் செய்துள்ளார்.
- கடலூர் மாவட்டம்- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்
- திருவாரூர் மாவட்டம்- உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
- நாகப்பட்டினம் (மயிலாடுதுறை பகுதி உட்பட) மாவட்டம்- நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
- செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின்
- சென்னை மாவட்டம்- மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவுகள் பின்வருமாறு,
- பொதுப்பணித்துறை அலுவலர்கள் அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து, கரைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
- பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் அடைப்புகள் ஏற்படாத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், தேவையான இடங்களில், பணியாளர்களை நியமித்து மாற்று சாலையில் பொதுமக்கள் பயணிக்க உதவ வேண்டும்.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க காவலர்கள் / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
- அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.