தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசுகையில், தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன எனவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.சி. சம்பத், "உங்கள் ஆட்சிக்காலத்தில்தான் நோக்கியா போன்ற பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அந்தத் தொழிற்சாலைகள் கூட தற்போது திறக்கப்பட்டுவிட்டன. கடந்த வாரம் கூட 'சியட் டயர்' தொழிற்சாலைகளை முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார். இதேபோல பல புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய மனோ தங்கராஜ், "விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மாநில அரசு தயங்கிவருகிறது. மத்திய அரசுடன் தற்போது நீங்கள் இணக்கமாக உள்ளீர்கள். ஆகவே, விவசாயிகளின் கடனை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வது சரியல்ல" என்றார்.
இதன்பின்பு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "உங்கள் ஆட்சிக்காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் குறித்து பல முறை விளக்கம் சொல்லிவிட்டேன். நீங்கள் ஏழு ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்தாகக் கூறினீர்கள். ஆனால், 5 ஆயிரத்து 361 கோடி ரூபாய் வழங்கியதாக கூறினாலும், நான்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே வழங்கினீர்கள். எங்கள் ஆட்சிக்காலத்தில் வேளாண் வங்கிகளில் பெற்ற கடன்களைத் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் சென்றோம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மனோ தங்கராஜ், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேரவையில் தீர்மானம் கொண்டு வர தமிழ்நாடு அரசு தயங்குகிறது என்றார். இதற்கு முதலமைச்சர் குறுக்கிட்டு பதிலளித்துப் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்தச் சிறுபான்மையின மக்களும் அச்சட்டத்தால் பாதிக்கவில்லை.
யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன். அதிகமாக உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக மக்களவையில் கேட்கவேண்டும். இங்கு பேசுவதை இங்கு பேசினால் நிறைவேறும், அதேபோல் மக்களவையில் பேச வேண்டியதை மக்களவையில் பேசினால்தான் நிறைவேறும்.
நாங்கள் கோரிக்கைதான் வைக்க முடியும்; நிறைவேற்ற முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து கூறி நாட்டு மக்களை ஏமாற்ற திமுக முயற்சிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்தச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள் என திமுகவினர் கூற வேண்டும்.
தவறான செய்தியைத் தொடர்ந்து கூறி அமைதியாக இருக்கின்ற தமிழ்நாட்டில் குந்தகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்" எனக் குற்றச்சாட்டினார்.
மேலும் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”திமுக வெளிநடப்பு செய்தபோது இரட்டைக் குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்தியில்தான் இருக்கிறது. மாநிலத்தில் இல்லை எனக் கூறினீர்கள். உங்களைப் போல் நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை” என ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: பவானிசாகர் வன பகுதிகளில் புதிய மின் பாதை: அமைச்சர் தங்கமணி தகவல்