சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகளில், தலைமைச் செயலர் இறையன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமே தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பட்டியல் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலம் குறித்த புள்ளிவிவரங்களைக் காண தமிழ் நிலம் என்ற இணையதளத்தில், அனைத்து நீர்நிலைகளின் விவரங்களும் தாலுகா வாரியாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த பட்டியலை போர்க்கால அடிப்படையில் தயாரித்து அதை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் அறிக்கையாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு எடுக்கப்பட்டுள்ளது. நான்காயிரத்து 762 அரசு கட்டடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளன.
நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாத கால அவகாசம் தேவைப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி அகற்றப்பட்டுவருகிறது.
அனைத்து நீர்நிலைகளையும் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டுவரும் வகையில் புதிய சட்ட முன்வடிவை எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களில் கொண்டுவரப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே வலுவான ஒரு செய்தியை அரசு தெரிவித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக விலக்கு