சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டு வரும் நிலையில், அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், முதற்கட்டமாக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தையும் அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட ஏதுவாக, 'முதல்வரின் முகவரித் துறை' என்ற தனித்துறையை உருவாக்க ஆணையிடப்பட்டது. இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக , அரசுத்துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் மற்றும்மொரு திட்டமாக 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி வைக்க உள்ளார்.
'மக்களுடன் முதல்வர்' என்ற இந்த திட்டத்தின் மூலமாகப் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரையிலும் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைத் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் மொத்தமாக 1745 முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ள நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து 31ஆம் தேதி வரை 'மக்களுடன் முதல்வர்' திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும் என்றும் இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வர். அதன் தொடர்ச்சியாக முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரியச் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!