சென்னை அருகே திருவேற்காடு நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜனிடம், ’சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”சசிகலா விடுதலையாவது மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். அது கட்சியின் கருத்தல்ல. அவர் விடுதலையானாலும் விடுதலை அடையாமல் போனாலும் கவலை இல்லை.
ஈபிஎஸ், ஓபிஎஸ் எனும் ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்கள் தலைமையில் ஆட்சி சீரும் சிறப்புமாக நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க : 'சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் மகிழ்ச்சி' - ராஜேந்திர பாலாஜி