மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில், திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வால்டாக்ஸ் சாலையில் கட்சி நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதேபோல் அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பாமக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக சாம் பால் போட்டியிடுகிறார். இந்நிலையில், பாமகவின் சின்னமான மாம்பழத்தை சென்ட்ரல் ரயில் நிலைய சுவர்களில் அக்கட்சியினர் வரைந்துள்ளனர்.
தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பிறகு தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்களை பொது இடங்களில் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கட்சி நிர்வாகிகள் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, "சென்னையில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதி மீறலாகும். இதுகுறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.