கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல்(30). கண்டெய்னர் லாரி ஓட்டுநரான இவர், அதிகாலை நேரத்தில் அசந்து தூங்கியபோது அடையாளம் தெரியாத நபர் செல்போனை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். எழுந்து பார்த்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்டதில் திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த இரண்டு வருடமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சாலைகளில் நிற்கும் வாகனங்கள், கண்டெய்னர் லாரி ஓட்டுநர்களின் செல்போன்களை அவர் திருடி வந்ததாகவும், பகல் நேரத்தில் திருடுவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே அவர் மீது சாத்தான்காடு காவல் நிலையத்தில் 2 வழக்கும், புதுவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பிரசாந்த் மீது வழக்குப்பதிந்து அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்த காவலர்கள், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.