சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை 8 மணிக்கு மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று ரஜினி அறிவித்து, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் இந்த சந்திப்பானது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதியக் கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதாவது, 'தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகிகளுடன் பேசும்போது," சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் கண்டிப்பாக போட்டியிடுவோம். ஆனால், நிச்சயமாக நான் முதல்வராக மாட்டேன். எனக்கு அந்த விருப்பம் இல்லை" என்று தெரிவித்ததாக கூறப்பட்டது. ரஜினியின் இந்த முடிவுக்கு நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், அவரின் இந்த திடீர் முடிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் கட்சி குறித்தும், சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் முக்கியமான விஷயங்களை பேச வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக, மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் தனக்கு சின்ன ஏமாற்றம் என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார். அந்த சின்ன ஏமாற்றம் எதுவென்று நாளை ரஜினிகாந்த் குறிப்பிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு பத்திரிகையாளர்களையும் ரஜினிகாந்த் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்குப் பின்னர், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்?