இது குறித்து செய்தியாளர்களிடம் பதிவாளர் குமார் கூறுகையில்,
"தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்து கல்லூரிகளில் இருக்கும் வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படும். அதேபோல் இந்தாண்டு 484 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டோம். அவற்றில் 92 பொறியியல் கல்லூரிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் சில பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை குறைத்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தோம். அதுமட்டுமல்லாமல் அந்த குறைகளை நிவர்த்தி செய்யவும் அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குறைகள் உள்ள கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால், அங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த பட்டியலை வெளியீடாமல் குறைகள் நிவர்த்தி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளோம். பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பணம் பெற்றுக் கொண்டு, குறைகள் உள்ள கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிடாமல் உள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அளித்துள்ள புகாரில் எந்தவித உண்மை தன்மையை இல்லை", என்றார்.