கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏறக்குறைய 120 நாள்களுக்கு மேலாக நீடிக்கும் ஊரடங்கால், சாலைகளில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த கால் டாக்சிகள் தற்போது தெருக்களின் ஓரத்தில் முடங்கியுள்ளன. கால் டாக்சியை போன்று அதனை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவை என மாநிலத்தில் உள்ள பெருநகரங்களில் கால் டாக்சியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரிதும் சிரமமாக இருப்பதாக கூறும் டாக்சி ஓட்டுநர்கள், பழக்கமில்லாத மாற்று வேலையை தேடி செல்வதாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து மதுரை ஓட்டுனர் சுப்பையா கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளாக ஓலா நிறுவனத்திற்காக கால் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கரோனா தொற்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக ஏறக்குறைய நான்கு மாதங்களாக எங்களுக்கு தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 500 வரை லாபம் பார்த்து வந்த எங்களுக்கு தற்போதைய சூழல் வறுமையின் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது” என்கிறார்.
இது ஒரு புறம் இருக்க ஊரடங்கால் சாலையில் ஓடாத வாகனங்களுக்கு சாலை வரி கட்டச் சொல்லி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் நிர்ப்பந்திப்பதாகவும், ஈஎம்ஐ கட்டச் சொல்லி நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கூறுகின்றார் அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் பாலாஜி.
இப்படியிருக்கும் பட்சத்தில் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் கூட இன்னும் கிடைக்காமல் பல ஓட்டுநர்கள் உள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள கால் டாக்சி ஓட்டுனர்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற அண்டை மாநிலங்களைபோல் நம்முடைய அரசும் பத்தாயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் ஒட்டுநர்களுக்கு என நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் .
அவசர நேரத்தில் அழைத்தவுடன் நம் வாசல் தேடி வந்த கால் டாக்சி ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...ஆடி மாத உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்!