சென்னை: தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி லோக் சத்தா கட்சியின் தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதில் அளிப்பது, அரசு 110 விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தவிர யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.
சபாநாயகரின் உத்தரவுப்படி, சட்டமன்ற அதிகாரிகள் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வு செய்தனர். அதன்படி, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் டெல்லி சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கேரளாவில் கேள்வி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒடிஷாவில் சட்டப்பேரவை நிகழ்வுகள் எடிட் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது என தெரியவந்தது.
அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சட்டமன்ற நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 எப்ரல் 12ஆம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, அன்றைய தினம் நடந்த பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் முக்கிய தலைவர்கள், எதிர்க்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை இணைக்க கோரி எதிர்க்கட்சியான அதிமுக கொறடா வேலுமணி தாக்கல் செய்த மனுவில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரிய வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற செயலாளர் தரப்பில் நேரடி ஒளிபரப்பிற்கு சாத்தியமில்லை என்றும், அவை குறிப்புகள் அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகள் எப்படி செயல்படுகின்றனர்? என்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள வேலுமணி, கடந்த 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டு தொலைக்காட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளை மறைத்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்கட்சியான அதிமுகவின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து சட்டப் பேரவையில் கேள்வி நேரமும், ஏப்ரல் முதல் பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்றத்தைப்போன்று சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய எந்த தடையும் இல்லை என்றும், நேரடி ஒளிபரப்பு செய்வதால் அரசிற்கு எந்த கூடுதல் செலவீனமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு நேவா என்ற செயலியை அறிமுக படுத்தியுள்ளதாகவும், அதன் மூலமாக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும் என்றும், இதற்கு ஆகும் செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்றுக்கொள்வது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளாதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரும் வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று(ஜூன் 20) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அரசியல் சாசன அமைப்பு சட்டத்தின்படி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், எதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமோ? அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், நேரமில்லா நேரத்தை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாது என்றும், அது குறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள வழக்கில் 8 வருடங்கள் கழித்து தன்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது என்றும் வாதிட்டார். இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!