சென்னை: சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் உள்ள மண்டபத்தில் வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது.
முதன்முறையாக மாநில அமைச்சராகியுள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை (காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை) தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவை அலுவல் கூட்டம்
இதையடுத்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அன்றைய தினமே, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில், சட்டப்பேரவை அலுவல் கூட்டம் இன்று (ஆக.17) நடைபெற்றது.
இதில் சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திமுக கொறாடா கோவி.செழியன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு
அதில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்ததாவது, 'தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 4.5 லட்சம் ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்த அரசாங்க நிலத்தில் 5 விழுக்காடும், நெல்லையில் 1 விழுக்காடும், சென்னையில் மட்டும் 23 விழுக்காடு நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
நில மேலாண்மைத் திட்டம்
இதனை மீட்டெடுக்கும் வகையில் வணிக வரித்துறையில் சட்டத்திருத்த மசோத கொண்டுவருவதுடன், தனியாக நில மேலாண்மைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தவறாகப் பதிவிட்ட ஆவணங்களை அரசாங்கமே திருத்தும் அளவிற்குச் சட்டம் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.
இதையும் படிங்க: ஒரு வாரம் முன்னதாக முடிவடைகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!