சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். நாகையில் மஞ்சக்கொல்லை மற்றும் சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கணினிகள், மடிக்கணினிகள், செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் இருவரும் 'அன்சாருல்லா' என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர். அவர்களும் ’அன்சாருல்லா’ அமைப்பிற்காக செயல்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: ஐக்கிய அரபு நாடுகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 14 பேரையும், டெல்லி விமான நிலையத்தில் இறங்கியபோது தேசியப் புலனாய்வு முகமை அமைப்பு அலுவலர்கள் கைது செய்து, தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். 14 பேரும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் புதிதாக திருநெல்வேலியைச் சேர்ந்த திவன் முஜிபர் என்பவர், இந்த வழக்கில் கைதான முகமது இப்ராகிம், முகமது ஷேக் மைதீன், மீரான் கனி, குலாம் நபி ஆசாத் ஆகியோருடன் சேர்ந்து அரேபிய நாடுகளில் ’அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்க உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தொடரும் விசாரணை: குறிப்பாக இந்தியாவில் இஸ்லாமிய விதிப்படி, இந்த பயங்கரவாத அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் ஜிகாத் போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. தோழன் என்ற பத்திரிகை இதழ் மூலமாக அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஜிகாதிய கொள்கைகளை தமிழ்நாட்டில் பரப்ப திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் இந்த விசாரணையில் மொத்தமாக 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மூ-காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!