சென்னை: தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோ ஜாக் வரும் 13ஆம் தேதி 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இன்று (அக்.10) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் 11 சங்கங்கள் இணைந்து தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை (டிட்டோ ஜாக்) இயங்கி வருகிறது. இந்த நிலையில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்.13ஆம் தேதி போராட்டம் நடத்துவது என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களை பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர்கள் அழைத்துள்ளனர். டிட்டோ ஜாக் குழுவின் சார்பில், 'புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு தேர்தல் கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், கடந்த 14 ஆண்டுகாலமாக இரண்டு ஊதியக் குழுக்களில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்ய வேண்டும், மத்திய அரசு இடைநிலை ஆசிரியகளுக்கு இணையான ஊதியமாற்றத்தினை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வேறுபாடின்றி 1.1.2016 முதல் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே 6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியான ஊதிய முரண்பாடுகளை களைந்த பின்னர் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறுபட்ட ஊதிய விகிதத்தினை நடைமுறைப்படுத்தி வருவதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு 'ஒரே கல்வித்தகுதி - சம வேலைக்கு சம ஊதியம்' என்ற நிலைப்பாட்டில் ஊதிய மாற்றத்தில் சமன் செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமல்லாது மத்திய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழகத்தின் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் காலை சிற்றுண்டி திட்டம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் தனி இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற தகுதித்தேர்வு டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 02.06.2023 அன்று தீர்ப்பு வழங்கியதன் நிலையில், தற்போது மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுபெற ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு என்பதை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த வேண்டுகிறோம்.
எமிஸ் செயலியில் கல்வி எதற்கு?: தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 8 வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடபோதனையில் முழுமையாக ஈடுபட இயலாத வகையில் தொடர்ந்து எமிஸ் செயலியில் பல்வேறு விபரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை மையக்கல்வி என்பது இன்று எந்திரமயக் கல்வியாக மாற்றப்பட்டு விட்டது. இதனால், மாணவரின் கற்றல் அடைவு என்பது முழுமையடையாத வகையில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப்பணி தவிர, பிற பணிகளில் குறிப்பாக எமிஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும், எண்ணும் - எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே கூட்ட வேண்டும், காலம்காலமாக தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையைக் கரோனாவை காரணம் காட்டி, கடந்த அரசு இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது. ஆனால், இன்றைய அரசோ காரணமின்றி அதை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது.
பறிக்கப்பட்ட, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா ஆட்சிக்காலம் முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டது. தற்போதைய திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு மாறாக, உயர்கல்விக்கு ஊக்கத்தொகை என அறிவித்திருப்பதுஆசிரியர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக, ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு முன்புபோல், ஊக்க ஊதிய உயர்வுக்கு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு ஆசிரியர்களின் இன்றைய பணிச்சூழலைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஏற்பட்டுள்ள தேவைப் பணியிடங்களில் மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும், ஆசிரியர் தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றப் பின்பும், ஆசிரியர் பணிநியமனத்திற்கு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும், நடுநிலைப்பள்ளிகளுடன் இணைந்த 2,381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஊராட்சி அரசு பள்ளிகளைப் போல, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் தூய்மைப்பணியாளர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும், காலியாக உள்ள அனைத்து வகையான ஆசிரியர் பணியிடங்களையும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பாமல், காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "அமர்த்தியா சென் நலமாக உள்ளார்" - சமூக வலைதளத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நந்தனா சென்!