சென்னை: மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015ஆம் ஆண்டில் இருந்து 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல காலமாக செவிலியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, மருத்துவ தேர்வு வாரியத்தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையம் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை முன்பும் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று (ஜூன் 7) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களைக் கைது செய்ய காவல்துறை முயன்றனர். அப்போது செவிலியர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செவிலியர்களைக் கைது செய்து காவல்துறையினர் சமூக நல கூடத்தில் அடைத்தனர்.
இதற்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜாம்பஜார் பெண் காவல் ஆய்வாளர் ராஜியின் மண்டை உடைந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 487 செவிலியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன் அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல காவல் ஆய்வாளரின் மண்டையை உடைத்தது தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவும் திருவல்லிக்கேணி காவல்துறையினர் செவிலியர்கள் மீது பதிவு செய்துள்ளனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அடையாளம் காணக்கூடிய நபர்கள் மீது மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது!