சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால், சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் அதிகாமக கூடும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிலும், நாளை (ஜன.17) காணும் பொங்கல் என்பதால், சென்னையில் மட்டும் 15 ஆயிரத்து 500 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ தூரத்துக்கு கடற்கரையில் தடுப்பு கட்டை அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்காமல் இருப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.
மேலும், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உள்ளனர். டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால், உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகளை குழந்தைகளின் கைகளில் கட்டிவிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையின் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை, காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.
மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிப்படும். மேலும், அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.
மேலும், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல் துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கார், பைக், தங்கம் பரிசுமழை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு!