இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை மேலும் கால அவகாசம் வேண்டும்” என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதை மாநிலத் தேர்தல் ஆணையம் என்றழைப்பதை விட, மாநில அவகாச ஆணையம் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது.
அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு ஓர் ஆணையம் தேவைதானா, ஒன்றும் செய்யாமல் மக்கள் வரிப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்கு ஓர் ஆணையமா என்ற கேள்விகள் எழுகின்றன. அக்டோபர் 2016ல் நடத்தி முடிக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மாறி மாறி, கால அவகாசம் கேட்டுக் கொண்டிருப்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையே கேலிக்குரியதாக்கும் கேடு கெட்ட செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும் 33 மாதங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஒன்றே அரசியல் சட்டம் தமிழ்நாடு செயல்பாடாமல் இருப்பதற்கு போதிய காரணம் என்பதை மாநில தேர்தல் ஆணையமோ அல்லது முதலமைச்சர் பழனிச்சாமியோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஆகவே உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உரிய கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.