சென்னை: கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏற்கனவே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த பழைய நபர்களை கொடுங்கையூர் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில் நேற்று மதியம் கொடுங்கையூர் குப்பைமேடு ராஜரத்தினம் நகர் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் அதிகளவிலான வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் (26), கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற சின்னப் பாம்பு (24), தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. இதில் ஆல்பர்ட் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, இவர்கள் 3 பேரும் குஜராத் மாநிலத்தில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பெற்று, அதனை கூடுதல் விலைக்கு வடசென்னையின் பல்வேறு இடங்களில் விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு நன்கு அறிமுகமான சிலரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து சென்னையில் பல இடங்களில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்களிடம் இருந்து 15 அட்டைகளில் இருந்த 150 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 250 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 7-ம் கால யாகசாலை பூஜை: ஜப்பான் நாட்டினர் பங்கேற்பு!