ஹவுஸ் ஓனரை கொலை செய்துவிட்டு ரூ.3.5 லட்சம் கொள்ளை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது! - வீட்டு உரிமையாளர் கொலை
சென்னை தரமணியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு மூன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை தரமணி கம்பர் தெருவைச் சேர்ந்த சாந்தக்குமாரி(65) என்பவர் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இவரது மகள் உஷா (27) தாயார் சாந்தகுமாரியின் வீட்டருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று(மார்ச்.12) காலை சாந்தகுமாரி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது பேரன் சரவணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், மூதாட்டியின் கழுத்து மற்றும் முகத்தில் கடித்ததுபோன்ற காயங்கள் இருந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி சாந்தகுமாரி தனது வீட்டை லீசுக்கு விடுவதற்காக முன்பணமாக மூன்றரை லட்சம் ரூபாய் வாங்கியிருந்ததும், மர்மநபர்கள் மூதாட்டியை கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மூதாட்டியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர்கள் சத்தமின்றி வீட்டை காலி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களைப் பற்றி விசாரித்தபோது, மூதாட்டி வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஸ்ரீஜா குடும்பத்தினருக்கும், மூதாட்டிக்கும் பிரச்சினை இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
கொலை, கொள்ளை நடந்த இடத்திலிருந்து சத்தமில்லாமல் வாடகை வீட்டை காலி செய்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வாடகை வீட்டில் தங்கியிருந்த ஸ்ரீஜா, அவரது தம்பி விஜய் பாபு, ஸ்ரீஜாவின் தாய் மேரி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஸ்ரீஜாவை மூதாட்டியின் மருமகன் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதற்காக மூதாட்டியிடம் பணம் கேட்டு ஶ்ரீஜா பிளாக்மெயில் செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மூதாட்டி சாந்தகுமாரி ஶ்ரீஜாவுக்கு பணம் தராமல் இருந்ததால் தகராறு அதிகமாகி, ஸ்ரீஜா குடும்பத்தினரை வீட்டை காலி செய்யும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனிடையே வேறொருவருக்கு லீசுக்கு விடுவதற்காக மூன்றரை லட்சம் ரூபாயை சாந்தகுமாரி முன்பணமாக வாங்கியதாக தெரிகிறது.
நேற்று காலை ஶ்ரீஜா குடும்பத்தினர் வீட்டை காலி செய்யும்போது, மூதாட்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறில் மூதாட்டி, ஸ்ரீஜாவின் தம்பி விஜய்பாபுவை கையில் கடித்துள்ளார். பதிலுக்கு விஜய்பாபு மூதாட்டியின் கன்னத்தில் கடித்து தாக்கியுள்ளார். அப்போது ஶ்ரீஜா தனது துப்பட்டாவை வைத்து மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு மூதாட்டி பீரோவில் வைத்திருந்த மூன்றரை லட்சம் ரூபாயை பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
ஸ்ரீஜா தன் காதலனுக்கு பண தேவை இருப்பதால் இந்த பணத்தை கொள்ளையடித்தாக தெரியவந்தது. இந்த கொலை கொள்ளை சம்பவத்திற்கு ஸ்ரீஜாவின் தாயார் மேரியும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு ஸ்ரீஜாவின் காதலனும் உடந்தையாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து ஶ்ரீஜாவின் காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.