சென்னை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்த பின்னர் கட்டணம் செலுத்த முடியாமல், ஒதுக்கீட்டு ஆணையை பெறாமல் விட்டுச் சென்ற மாணவிகளுக்கு இன்று (நவ.23) மீண்டும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தும், கட்டணம் செலுத்த முடியாது என்பதால் மூன்று பேர் ஒதுக்கீட்டு ஆணையைப் பெறாமல் விட்டுச்சென்று விட்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த திவ்யா, ஈரோட்டைச் சேர்ந்த கவுஷிகா ஆகிய இரண்டு மாணவிகள் 19ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களைத் தேர்வு செய்தனர். ஆனால் கட்டணம் செலுத்த முடியாது என ஒதுக்கீட்டு ஆணைகளை மட்டும் பெறாமல் சென்றுவிட்டனர்.
இதேபோல் தாரணி என்ற மாணவியும் பிடிஎஸ் ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுச் சென்றார். இந்நிலையில், 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணங்களை அரசே செலுத்தும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து, இன்று மருத்துவத் தேர்வுக் குழு இவர்களை அழைத்து, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கியது.
இந்த அறிவிப்பு, கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கல்லூரிகளைத் தேர்வு செய்யாமல் வேண்டாம் எனக்கூறிச் சென்ற மாணவர்களுக்கு இது பொருந்தாது எனவும் மருத்துவக் கலந்தாய்வு அலுவலர் தெரிவித்துள்ளார்.