சென்னை: வேளச்சேரியிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலானது நேற்று முன்தின் மாலை ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயிலில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கட்டை மற்றும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கிருந்த சக பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து தகவலறிந்த ராயபுரம் ரயில்வே போலீசார் அந்த ரயிலை மடக்கி பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் இரு தரப்பும் மாநில கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வீடியோ காட்சிகளை வைத்து மாநில கல்லூரி மாணவர்களான ஸ்ரீகாந்த்(19), விஜய் சந்தோஷ்(19) மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த வாரம் கும்மிடிப்பூண்டி ரூட்டை சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்கள் கொருக்குப்பேட்டை ரயில் நடைமேடையில் கத்தியை தேய்த்தபடியே சென்றபோது அதை வீடியோ எடுத்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல கத்தியை தேய்த்தவரும் கைது செய்யப்பட்டார். ஆகவே இந்த கைதுக்கு காரணமான வீடியோ எடுத்த மாணவர்களை தாக்க முற்பட்டபோதே நேற்று அந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி...நள்ளிரவில் மாட்டை திருடி சென்ற இளைஞர்...