சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி, ஆதாம் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர், சின்ன பொன்னன் (வயது 80). இவர் 20 ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் இவரது வீட்டிற்கு வெளியே இருந்த ௧௫ ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 24-ஆம் தேதியன்று சின்ன பொன்னன் வீட்டின் எதிரே உள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் வீட்டிற்கு திரும்பிய போது சிவப்பு நிற காரில் வந்த நபர்கள் ஐந்து ஆடுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆடுகள் திருடு போன இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது காரில் வந்த நபர்கள் ஆடுகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அது இருசக்கர வாகனத்தின் எண் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் ஆடு திருடு போன இடத்திலிருந்து 23 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் ஆடு திருடிச் சென்ற கார் நின்றிருந்ததை கண்டுப்பிடித்தனர். விசாரணையில் காரின் உரிமையாளர் அனகாபுத்தூர் கருணாநிதி நகர் 1-வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது-30) என தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆன ஜெயக்குமார் ஆட்டோ ஓட்டும் போது பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி (வயது-40) என்பவருடன் சேர்ந்து இருவரும் வாடகை கார் மூலம் ஆடுகளை திருட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து ஆடுகளை திருடி அதில் வந்த பணத்தை வைத்து ரூ.2,லட்சம் மதிப்புடைய கார் ஒன்றை வாங்கி உள்ளனர். வாங்கி காரின் முன் பகுதியில் சரோஜினி அமர்ந்து கொண்டு ஆடுகள் மேய்ச்சலுக்கு இருக்கும் இடத்திற்கு சென்று ஆடுகளுக்கு பொரி போட்டு பகல் நேரங்களிலேயே ஜெயக்குமாருடன் சேர்ந்து ஆடுகளை திருடி அவற்றை சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த பரூக் (வயது-30) என்பவரின் கறிக்கடையில் ரூ.4000 முதல் ரூ.6000 வரை விற்று பணத்தை உல்லாசமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் முறைப்படி விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் சென்னை புறநகர்ப் பகுதியான பல்லாவரம் பம்மல் நாகல் கேணி, அனகாபுத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக ஆயிரம் ஆடுகளுக்கு மேல் திருடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆடு திருடப்படும் பொழுது ஆட்டை பறி கொடுத்தவர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யும் போது சங்கம் நகர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை விரட்டி விட்டதாகவும் அவமரியாதையாகப் பேசி அனுப்புவதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆடு திருட்டுகள் குறித்து வழக்குகள் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டப்பட்டதால் ஆடு திருட்டு கும்பலுக்கு எந்த தடையும் இல்லாமல் ஆடுகள் திருட ஏதுவாக இருந்துள்ளது. திருட்டு கும்பல் பிடிபட்டாலும் ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகள் திருடுபோனதை குறித்து போலீசாரிடம் கேட்டபோது, ஆடுகள் எல்லாம் கசாப்பு கடைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
அதன்பிறகு ஆடு திருடிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வருவாய் ஆய்வாளருக்கு மிரட்டல்; திமுக கவுன்சிலர் மீது வழக்கு!